Wednesday 23 September 2009

18. பட்டம் துறந்த கதை

ஈ.வெ.ரா.வுக்கும், காந்திஜிக்குமிடையே நடைபெற்ற உரையாடல் சுவையானதாகும். அதன் ஒரு பகுதியை இங்கே காணலாம்.

ஈ.வெ.ரா.: இந்து மதம் மறைய வேண்டும்.

காந்தி: ஏன்?

ஈ.வெ.ரா.: இந்து மதம் என்று எதுவும் கிடையாது.

காந்தி: இருக்கிறது.

ஈ.வெ.ரா.: அது பிராமணர்கள் உருவாக்கிய பிரமை.

காந்தி: அனைத்து மதங்களும் அதைப் போன்றதுதான்.

ஈ.வெ.ரா.: இல்லை. இதர மதங்களுக்கு வரலாறு, லட்சியங்கள், கோட்பாடுகள் உள்ளன. மக்கள் அவைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

காந்தி: இந்து மதத்தில் அத்தகையது எதுவும் இல்லையா?

ஈ.வெ.ரா.: சொல்வதற்கு என்ன இருக்கிறது? பிராமணன், சூத்திரன், வைசியன் போன்ற சாதீய உட்கூறுகள் தவிர அதில் வேறெந்த விதியோ, சான்றோ கிடையாது.

காந்தி: அது குறைந்தபட்சம் இந்தக் கோட்பாட்டைக் கொண்டுள்ளது.

ஈ.வெ.ரா.: இருந்தும் என்ன பயன்? அதன்படி பிராமணர்கள் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள். நீங்களும், நானும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள்.

காந்தி: நீங்கள் சொல்வது தவறு. வர்ணாசிரம தர்மத்தில் தாழ்ந்த சாதி என்றும், உயர்ந்த சாதி என்றும் எவ்வித தாரதம்மியமும் கிடையாது.

ஈ.வெ.ரா.: நீங்கள் இதைச் சொல்லலாம். ஆனால் நடைமுறையில் அது வேறுவிதமாக இருக்க முடியாது.

காந்தி: இல்லை. சமத்துவம் இருக்கிறது.

ஈ.வெ.ரா.: இந்துமதம் இருக்கும் வரை இதை யாரும் பெற முடியாது.

காந்தி: இந்துமதத்தின் மூலமாக எவரும் இதைப் பெற முடியும்.

ஈ.வெ.ரா.: அப்படியானால் பிராமணர்- சூத்திரர் வேறுபாட்டை நிரூபிக்கும் மதச்சான்றுகள் குறித்து என்ன சொல்வது?

காந்தி: இந்து மதம் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு சான்றுகள் இல்லை என்றுதானே நீங்கள் வாதாடுகிறீர்கள்?

ஈ.வெ.ரா.: மதம் என்று எதுவும் கிடையாது. எனவே அதை நிரூபிக்கச் சான்றுகளும் கிடையாது என்றுதான் நான் சொல்லி வருகிறேன். மதம் இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டால், அதை நிரூபிக்கும் சாட்சியங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காந்தி: நாம் மதத்தை ஏற்றுக் கொண்டு சான்றுகளை உருவாகிக்கொள்ளலாம்.

ஈ.வெ.ரா.: அது சாத்தியமற்றது. மதம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் நாம் எதையும் மாற்ற முடியாது அல்லது மாற்றியமைக்கவும் முடியாது.

காந்தி: இதர மதங்களைப் பொறுத்தவரை நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், இந்து மதத்தைப் பொறுத்தவரை சரியல்ல. அதை ஏற்றுக் கொண்டபின் அதன் பெயரால் நீங்கள் எதையும் செய்ய முடியும். அதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.

ஈ.வெ.ரா.: நீங்கள் இதை எப்படிச் சொல்ல முடியும்? யார் அதை ஏற்றுக் கொள்வார்கள்? அதில் நீங்கள் முன்னோடிப் பங்கை ஆற்ற முடியுமா?

காந்தி: நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். இந்து மதம் என்று எதுவுமில்லையென்று நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கென்று திட்டவட்டமான விதி இல்லையென்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால்தான் இந்துக்கள் என்று நம்மை நாம் கூறிக்கொள்வதின் மூலம் நாம் விரும்பும் முறையில் அதற்காக பொதுவான லட்சியங்களை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும். இந்து மதம் மட்டுமே மக்களை நல்ல வழிகளுக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதை நான் உறுதியாகக் கூற முடியும்; ஏனென்றால் இதர மதங்களுக்கென்று கோட்பாடு, வரலாறு மற்றும் இதர சான்றுகள் உள்ளன; அதை யாராவது மாற்றினால் ஒழிக்கப்பட்டே விடுவார்கள்; கிறிஸ்துவர்கள் ஏசுநாதர் கூறியபடி நடந்து கொள்ள வேண்டும். அதேபோன்று முஸ்லீம்கள், முகம்மது நபியும், குரானும் சொல்வது போல வாழ வேண்டும். அதை மாற்றுவதற்கு ஏதேனும் முயற்சி செய்யப்படுமேயானால் அது மதத்தின் கட்டளைகளுக்கு மாறானதாகும். அவ்வாறு இல்லை என்று கூறுபவர்கள் மதத்துக்கு வெளியே வந்து பிரகடனம் செய்யலாம்; ஆனால் உள்ளிருந்து கொண்டே, அதை மறுக்க முடியாது. இதர மதங்களின் உண்மையான நிலமை இதுதான். ஆனால், அவர்களைப் போல் அல்லாது இந்து கோட்பாட்டில் எவர் ஒருவரும் முன்னால் வந்து தயக்கமின்றி எதையும் போதிக்க முடியும். இந்து மதத்திலிருந்து பல மகத்தான மனிதர்கள் தோன்றி, பல விஷயங்களைக் கூறியுள்ளனர். எனவே இந்து மதத்தில் இருக்கும்பொழுதே, நாம் அதை மாற்ற முடியும். மனிதகுலத்தின் நன்மைக்காக பல விஷயங்களைச் செய்ய முடியும்.

ஈ.வெ.ரா.: மன்னிக்கவும். அதைச் செய்ய முடியாது.

காந்தி: ஏன்?

ஈ.வெ.ரா.: இந்து மதத்திலுள்ள சுயநலக் கும்பல் அவ்வாறு செய்ய உங்களை அனுமதிக்காது.

காந்தி: நீங்கள் ஏன் இவ்வாறு கருத வேண்டும்? இந்து கோட்பாட்டில் தீண்டாமை இல்லையென்ற அம்சத்தை இந்துக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

ஈ.வெ.ரா.: கொள்கையை ஏற்றுக் கொள்வதிலும், அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதிலும் வித்யாசம் உண்டு. எனவே அதை கடைபிடிப்பது சிரமமானதாகும்.

காந்தி: நான் அதைச் செய்கிறேன். கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதை நீங்கள் கண்டீர்களா?

ஈ.வெ.ரா.: நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை. அதெல்லாம் உங்கள் செல்வாக்கினாலும், அவர்களுக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டிய அவசியத்தினாலும் ஏற்பட்டது என்பதுடன் சுயநலத்தின் காரணமாக நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வது போல் நடிக்கிறார்கள். அதற்குப் பதிலாக நீங்கள் அவர்களை நம்புகிறீர்கள்.

காந்தி: (சிரித்துக் கொண்டே) யார் அவர்கள்?

ஈ.வெ.ரா.: பிராமணர்கள் அனைவரும்.

காந்தி: உண்மையிலேயா?

ஈ.வெ.ரா: ஆம்.

காந்தி: உண்மையாகவா?

ஈ.வெ.ரா.: ஆம். அந்த விஷயத்தில் உங்களோடு கூட வரும் பிராமணர்கள் அனைவரும்.

காந்தி: அப்படியானால் எந்த பிராமணரையும் நீங்கள் நம்புவதில்லையா?

ஈ.வெ.ரா.: என்னை ஈர்ப்பதில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர்.

காந்தி: ராஜகோபாலாச்சாரியைக் கூட நீங்கள் நம்புவதில்லையா?

ஈ.வெ.ரா.: அவர் நல்லவர், நேர்மையானவர், தியாகம் செய்யும் மனிதர். ஆனால் இந்த நற்குணங்கள் அனைத்தும் அவர் சமூகத்திற்கு சேவை செய்ய அவருக்கு உதவுகிறது. அவர் சுயநலம் அற்றவர். ஆனால் நான் என் சமூகத்தின் நலனை அவருடைய நலன்களுக்கு அடகு வைக்க முடியாது.

காந்தி: இதைக் கேட்க வியப்பாக இருக்கிறது. பிரச்சனை அதுதான் என்றால், உலகில் ஒரு நேர்மையான பிராமணனை தேடிக் கண்டுபிடிப்பது என்பது மிகுந்த சிரமமானது என்பதுதான் உங்கள் கருத்தா?

ஈ.வெ.ரா.: இருக்கலாம், அல்லது இல்லாமலிருக்கலாம். நான் யாரையும் பார்க்கவில்லை.

காந்தி: அவ்வாறு சொல்லாதீர்கள். நான் ஒரு பிராமணனை பார்த்தேன். அவர் ஒரு சிறந்த பிராமணர் என்றே இன்றும் கருதுகிறேன். அவர்தான் கிருஷ்ண கோகலே.

ஈ.வெ.ரா.: ஓ ! உங்களைப் போன்ற மகாத்மாவுக்கு இந்த உலகத்தில் ஒரே ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது சாத்தியமாகியிருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற சாதாரணமான பாவிகளுக்கு ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?

காந்தி: (சிரித்துக் கொண்டே) உலகமானது எப்பொழுதும் அறிவுஜீவிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. பிராமணர்கள் படித்த மக்கள். அவர்கள் என்றென்றும் இதரர்கள் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவார்கள். எனவே, அவர்களை விமர்சிப்பதால் எவ்வித பயனுள்ள காரியமும் ஏற்படப் போவதில்லை. இதரர்களும் அந்த மட்டத்தை அடைய வேண்டும்.

ஈ.வெ.ரா.: இதர மதங்களில் இத்தகைய மனிதர்களை நாம் காண முடிவதில்லை. இங்கே இந்த மதத்தில் மட்டுமே பிராமணர்கள் அறிவுஜீவிப் பகுதியை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். மீதமுள்ள 90 சதவீதத்தினர் கல்வியறிவு அற்றவர்களாகவோ அல்லது அப்பாவிகளாகவோ இருக்கிறார்கள். அனவே ஒரு சமூகத்தில் ஒரு பகுதி மக்கள் மட்டுமே அறிவு ஜீவிகளாகவும், படித்த குழுவாகவும் இருப்பது அந்த சமூகத்திலுள்ள இதர பகுதி மக்களின் நல்வாழ்வுக்கு ஊறு விளைவிக்கக்கூடியது இல்லையா? எனவேதான், இந்த நிலமைக்கு பிரதான காரணமாக உள்ள மதம் என்பது தொலைந்து போக வேண்டும் என நான் தொடர்ச்சியாகக் கூறி வருகிறேன்.

காந்தி: உங்கள் நிலைப்பாடு என்ன? இந்து மதத்தையும் அதைப்போன்ற சமூகத்திலிருந்து பிராமணர்களையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக நீங்கள் நிற்கிறீர்கள் என்று நான் கருதலாமா?

ஈ.வெ.ரா.: போலித்தனமான இந்து மதம் ஒழிந்தால், பிராமணர் எவரும் இருக்கமாட்டார். நாம் சூத்திரர் வருணத்தைச் சேர்ந்தவர்கள் அனைத்துமே பிராமணர் பிடியில்தான் உள்ளன.

காந்தி: அது சரியல்ல. அவர்கள் இப்போது நான் கூறுவதை கேட்க மாட்டார்களா? இந்தக் கோட்பாட்டின் கீழ் ஒன்று பட்டுள்ள நாம் அதனுடைய எதிர்மறையான அம்சங்களை இப்பொழுதும் அகற்ற முடியும்.

ஈ.வெ.ரா.: இதை நீங்கள் சாதிக்க முடியாது என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. அப்படி நீங்கள் சாதிக்க முடிந்தாலும், எதிர் காலத்தில் உங்களைப் போன்ற சில மகத்தான மனிதர்கள் தோன்றி நீங்கள் செய்த வேலையை மாற்றிவிடுவார்கள்.

காந்தி: அது எவ்வாறு சாத்தியம்?

ஈ.வெ.ரா.: நீங்கள் முன்பு கூறியது போல, இந்து மதத்தின் பெயரால் எவர் ஒருவரும் தன்னுடைய சிந்தனை வழிக்கேற்ப மக்களைக் கொண்டுவர முடியும். அதே வழியில் நாளை தோன்றக் கூடிய ஒரு மகத்தான மனிதன் இந்துக் கோட்பாட்டின் பெயரால் எதையும் செய்ய முடியும்.

காந்தி: எதிர்காலத்தில் எவரொருவரும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் முயற்சி நடைமுறைச் சாத்தியமற்றது இல்லையா?

ஈ.வெ.ரா.: இ தைக் கூறுவதற்கு என்னை மன்னிக்கவேண்டும். இந்து மதத்தின் உதவியோடு ஸ்தூலமாக எதையும் செய்வது உங்களுக்குச் சாத்தியமற்றது. மாற்றத்தைச் செய்ய பிராமணர்கள் உங்களை விட மாட்டார்கள். அவர்களுடைய நலன்களுக்கு எதிராக நீங்கள் வேலை செய்வதாக அவர்களுக்குத் தெரிந்தால், உங்களை எதிர்த்துப் போராடத் துவங்கி விடுவார்கள். அத்தகையதொரு மாற்றத்தைச் செய்ய இதுவரை எந்த மகத்தான மனிதரும் முயற்சிக்கவில்லை. யாராவது அதற்காக முயற்சித்தால் பிராமணர்கள் அவரைச் சும்மா விட மாட்டார்கள்.

காந்தி: நீங்கள் பிராமணர்களுக்கெதிராக வெறுப்பைக் கொண்டுள்ளீர்கள். அதுதான் உங்கள் சிந்தனையில் பிரதானமாக நிற்கிறது. நம்முடைய விவாதம் மூலம் நாம் இதுவரை எவ்வித உடன்பாட்டுக்கும் வரவில்லை. எனினும் எதிர்காலத்தில் இரண்டு அல்லது மூன்று முறை நாம் சந்தித்துப் பேசுவோம். நமது நிலை குறித்து தீர்மானிப்போம். (நன்றி- ஈ.வெ.ரா.பெரியார் வாழ்வும் பணியும்)

காந்தியை பார்த்து விட்டு திரும்பிய பின் முதல் வேலையாக ராமசாமி செய்த காரியம் என்ன தெரியுமா? நாடே தலையில் தூக்கி வைத்து வைத்துக்கொண்ட்டாடிக்கொண்டிருந்த மகாத்மா காந்தியை தன் பத்திரிக்கைகளில் ‘ஸ்ரீமான் காந்தி' என்றே குறிப்பிடலானார். அதோடு பத்திரிக்கையின் முகப்பில் இருந்த ராமசாமி நாயக்கர் என்ற பெயரில் இருந்த நாயக்கரையும் எடுத்து விட்டு, ஈ.வெ.ராமசாமி என்று போடத்தொடங்கினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தனது குடியரசு நாளிதழில் பிராமணர்களின் உயர்வு வேசம் பொய் என்று எழுதத்தொடங்கினார் ஈ.வெ.ரா. ஒருவன் தன்னைத் தான் உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளுவதையும், மற்றவர்களை தாழ்வானவர்கள் என்று பிரகடனப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக பேசியும், எழுதியும் வரலானார் ஈ.வெ.ரா. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருவதோடு, பிராமனர் அல்லாதோர் இயக்கத்திற்கு ஆதரவாகவும் எழுதிவந்தார்.

ஈ.வெ.ரா காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியே வந்துவிட்டாலும், அக்கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யாமலிருந்தார். அதனால் ராமசாமியை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காங்கிரஸ் கட்சி ஒரு குழுவை நியமித்தது. அக்குழு தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஈ.வெ.ராமசாமி பேசிவருவதை கண்டது. பின்னர் தலைமையிடத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது. காங்கிரஸ் விரோத போக்கை கொண்டிருப்பதாகக்கூறி, ஈ.வெ.ராமசாமியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் பறித்துக்கொண்டது காங்கிரஸ்.

இதன் பிறகு ஈ.வெ.ரா இன்னும் சுதந்திரமாக உணர்ந்தார். இனி காந்தி மாதிரியான எந்த தலைவருக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்காது. தொடர்ந்து மக்களிடையே சொற்பொழிவு செய்வது, மனிதப் பிறப்பில் தான் உயர்ந்தவன் என்று சொல்லுவதையும் கண்டித்து எழுதிவந்தார். நீதிக்கட்சியின் கூட்டங்களில் தொடர்ந்து இடம்பெற்றார் ஈ.வெ.ரா.

சில மாதங்களில் சென்னை சட்டமன்றத்திற்கு பொதுத்தேர்தல் வந்தது. அப்போது எந்த கட்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ளாத ராமசாமி தனியாக ஒரு கட்சிக்கு ஆதரவு என்ற நிலைஎடுக்காமல் இருந்தார். ’நல்ல திறமை உடையவர்கள், பார்ப்பனர் அல்லாதவர்கள், மற்ற மனிதனை தாழ்வாக எண்ணாதவர்கள், தன்னலம் காணாது மற்றவர்களுக்கு உழைக்கக்கூடியவர்கள். இவர்களே சட்டசமைக்கு போக தகுதியானவர்கள். இது போன்றோரை மக்கள் தேர்வு செய்தல் வேண்டும்’ என்று தமது பத்திரிக்கையில் எழுதியதோடு ஒதுங்கி நின்று விட்டார் ஈ.வெ.ரா.

தேர்தலில் நீதிகட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. முதலமைச்சராக இருந்த பனகல் அரசர் கூட மிகுந்த சிரமங்களுக்கிடையிலேயே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியில் பிரிவான சுயராஜ்ய கட்சி பெற்றி பெற்றது. ஆனால் அமைச்சரவை அமைக்கமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்ததால்.. சுயேட்சை உறுப்பினராக வெற்றி பெற்றிருந்த டாக்டர். சுப்பராயன் அமைச்சரவையை அமைத்தார். இவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது.(இச்சமயத்தில் கூட்டு முதல்-மந்திரிகளே தமிழகத்தில் இருந்தனர்) நீதிகட்சி எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது.

தேர்தலில் தோல்வி நீதிகட்சியில் பலருக்கும் அதிர்ச்சியை தந்திருந்தது. அதனால் பல தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் பக்கமே போகலாமெ முடிவு செய்திருந்தார்கள். இந்த சமயத்தில் தான் மதுரையில் நடந்த பிராமணர் அல்லதோர் மாநாடு நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு ஈ.வெ.ராமசாமி பேசினார். அவரின் அனல் பறக்கும் பேச்சு பலருக்கும் நம்பிக்கையைக் கொடுத்தது. நீதிக்கட்சியில் தலைவர்களும் தொண்டர்களும் மிகுந்த உற்சாகமடைந்தார்கள். மதுரையைத்தொடர்ந்து திருநெல்வேலி, கோயம்பத்தூர் போன்ற பல இடங்களிலும் பிராமணர் அல்லதோர் மாநாடுகள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களுக்கும் சென்று தமது சுமயரியாதைக்கொள்கைகளை பறைசாற்றும் மேடையாக அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார் ஈ.வெ.ரா.

(தொடரும்) *Download As PDF*

Monday 21 September 2009

பத்திரிகைகள் அனைத்தும் அயோக்கியத்தனம் செய்கின்றன

நம்முடைய கோவை மாவட்டம், நம் இயக்கத்தைப் பொறுத்தவரையில் பிற்பட்டதாக உள்ளதை எண்ணி உண்மையில் வெட்கப் படுகிறேன். காரணம், ஒருக்கால் நான் பிறந்த ஜில்லா என்ற காரணமாகத்தான் இருக்க வேண்டும். நான் காங்கிரசில் இருக்கும்போது, காந்தியார் ஈரோட்டை எடுத்துக்காட்டித்தான் பேசுவார். சங்கரன் நாயர் அவர்கள் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்திவிடும்படி காந்தியாரிடம் சொன்னபோது, ‘அது என் கையில் இல்லை; அது ஈரோட்டில் உள்ளது. அதுவும் கண்ணம்மாள், நாகம்மாள் கையில் உள்ளது' என்று சொன்னார். இது, ‘இந்து'வில் வந்தது.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அன்று அந்த நிலையில் இருந்தது. முதலில் ஒரு பெண் மறியலுக்கு வந்து கைதானார் என்றால், அது ஈரோட்டில்தான். 144 உத்தரவு போட்டு 3 நாளில் வாபஸ் பெற்றுக் கொண்டார்கள் என்றால், அதுவும் ஈரோட்டில்தான் நடந்தது. அப்படியிருந்த ஊர் இன்று இந்த நிலையில் உள்ளது.

சர்வ வல்லமையும் படைத்த பார்ப்பானை எதிர்க்க, எங்களைத் தவிர வேறு ஆளில்லை. நாங்கள் பார்ப்பானை ஒழிக்கிறவர்கள். ஒழிக்கிறோமோ இல்லையோ, ஒழிக்க வேண்டும் என்கிற உறுதியுடன் இருப்பவர்கள். அதோடு கூட நிற்பதில்லையே! பார்ப்பான் உண்டாக்கிய ராமனை எரித்தோம்; அவன் உண்டாக்கிய பிள்ளையாரை உடைத்தோம்; அவன் கடவுளை உடைத்தோம். அதற்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா, இல்லையா என்பது இதைப் பார்க்கும் போதல்லவா தெரிகிறது? யாரும் செய்யாத அந்தக் காரியத்தை நம் கழகம் செய்வதால், அது பெருமையே தவிர வேறு என்ன? எதற்கு இன்று சிறைக்குப் போகிறார்கள்? வேறு எந்த இயக்கம், ஒரே நாளில் 4000 பேரைச் சிறைக்கு அனுப்பியது?

சாதி ஒழிய வேண்டுமென்றால், ஜனநாயகத்தின் தலைவர் நேரு சொல்கிறார், ‘பிடிக்காவிட்டால் மூட்டை முடிச்சைக் கட்டு' என்கிறார். நீ யார்? உனக்கு என்ன உரிமை? என்ன உன் யோக்கியதை? உன் பரம்பரை என்ன? நீ எங்களை வெளியே போ என்றால், அதற்குப் பெயர் ஜனநாயகமா? ஜனநாயகம் என்றால், கேளேன் சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா என்றால், மக்களைக் கேளேன்! ஏனப்பா சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா என்று கேள். 100 க்கு 51 பேர் சாதி இருக்க வேண்டும் என்றால், நாங்கள் சூத்திரன், சக்கிலி, பறையன் என்று நெற்றியில் பச்சைக் குத்திக் கொள்கிறோம்; 51 பேர் ஒழிய வேண்டுமென்றால், ஒழிய வேண்டியதுதானே? அதுதானே ஜனநாயகம்? சாதி ஒழிய வேண்டும் என்றால், நாட்டைவிட்டு ஓடு என்பதா ஜனநாயகம்?...

ஒரு அதிகாரி என்னிடம் வந்து கேட்டார், ‘என்ன நீ இதில் இத்தனை வேண்டும், அதில் இத்தனை வேண்டும் என்று சப்தம் போடுகிறாயே? ஆபிசில் பார்த்தால் எல்லாம் பார்ப்பானாகவே இருக்கிறானே, எப்படி என்று கண்டுபிடித்தாயா?' என்றார். எப்படியப்பா என்றேன்? அவர் சொன்னார்: ‘ஒரு ஆபிசில் எவனையாவது லீவு எடுக்கச் சொல்லிவிட்டு, அந்த இடத்திற்குத் தற்காலிகமாக ஆள் வேண்டும் என்கிறான். அவன் தற்காலிகம் என்றால் நீயே போட்டுக்கொள் என்பான். இவன் பார்ப்பானாகவே போட்டு நிரப்பி வைப்பான்.

3 வருடம் தற்காலிகமாக வேலை பார்த்துவிட்டால், வேலை காரியமாகிவிடுகிறது.' இப்படிப் பித்தலாட்டம் செய்து நுழைக்கிறான். நீதி நிர்வாகத்தைப் பிரித்தான். என்ன ஆயிற்று? நீதியில் முழுக்கவும் பார்ப்பானே வந்து, வக்கீல் பசங்களில் பொறுக்கிப் போட்டு விடுகிறான். இப்படிப்பட்ட அக்கிரமம் நடப்பதை யார் கேட்க நாதி? இந்நாட்டுப் பத்திரிகைகள் அத்தனையும் அயோக்கியத்தனம் செய்கின்றன. நிலைமை அப்படி ஆகிவிட்டது; பார்ப்பான் தயவில்லாமல் பத்திரிகை வாழாது. ரேடியோ அவனிடம். இப்படிப் பத்திரிகை ஒரு நாட்டில் கேடாக இருந்தால், அந்த நாடு எப்படி உருப்படும்?...

நம் தமிழ் நாட்டில் ‘இது நம் நாடு' என்கிற நினைப்பே இல்லையே! எங்கோ ஓசியில் இருப்பதாகத்தானே எண்ணுகிறார்கள்? சாதி ஒழிய வேண்டுமென்று இத்தனை பேர் சிறைக்குப் போனோம்; பலர் செத்தார்கள்; யாராவது கவலைப்பட்டார்களா? நாமே கல்லுடைக்கிறோம், கக்கூஸ் எடுக்கிறோம், நமக்கு வேலையென்றால் பியூன் வேலை, போலிஸ் வேலை. நம்முடைய பிள்ளைகள் படிக்கிறார்கள். படித்த பின் மண்வெட்டி எடுக்க மாட்டான்; வேலையில்லையென்றால் அடுத்த காட்சி என்ன? சினிமாவுக்குப் போக வேண்டியதுதானா? இவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?

இப்போது மந்திரிகள், கலப்பு மணம்தான் சாதி ஒழிய வழி என்ற போது சும்மா இருந்தார்கள். காங்கிரசில் சொன்னான், சாதி ஒழிய கலப்பு மணம் வேண்டும் என்றான். அதுக்கு எழுதுகிறான் ஒரு பார்ப்பான்: ‘கலப்புமணம் செய்யலாம் என்று காங்கிரஸ் சொல்லுவது தப்பு. ரத்தம் கெட்டுப் போகும்.' இவர்கள் ரத்தம் சுத்தமான ரத்தமாம்! அது கெட்டுப்போகுமாம்! ‘கலப்பு மணம் பேசுவதற்குதான் பெருமை; காரியத்திற்கு ஆகாது. ராஜாஜி பெண்ணைக் காந்தி மகனுக்குத் தந்தார்; அது உருப்படவில்லை; நேரு எவனுக்கோ கொடுத்தார் அதுவும் உருப்படவில்லை. எனவே, கலப்பு மணம் கூடாது' என்று ‘இந்து' பத்திரிகையில் எழுதுகிறான். ஆகவே, நீங்கள் சிந்திக்க வேண்டும். பார்ப்பனர்களால் எந்த முன்னேற்றத்துக்கும் இடையூறுதான்!

ஈரோட்டில் 19.6.1958 அன்று ஆற்றிய சொற்பொழிவு: ‘விடுதலை' 25.6.1958 *Download As PDF*

Thursday 17 September 2009

ஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகும்


Periyar E.V.Ramasamy இந்து மதம் என்றும் இந்துக்கள் என்றும் நம்மைச் சொல்லிக் கொண்டு, இந்து மதம் சாஸ்திர புராண சம்பந்தமான விஷயங்களைத் தமிழர் தலையில் சுமத்துவதும், தமிழர்கள் அதற்குக் கட்டுப்படுவதும் நியாயமா? இந்து மதப் புராணங்களில் ‘கற்பு'க்கு லட்சணம் ஒரு பெண் (நளாயினி), தனது புருஷன் குஷ்டரோகியாய் இருந்து கொண்டு தாசி வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொன்னாலும், அவனைக் கழுவி எடுத்துக் கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக் கொண்டு போய் தாசி வீட்டில் வைத்து, விடிந்த பிறகு மறுபடியும் தாசி வீட்டிலிருந்து தன் வீட்டிற்குத் தூக்கிவர வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தை வலியுறுத்துகிற ஒருவன், தன் மகளுக்கு இப்படிப்பட்ட புருஷன் அமைந்து அவன் தன் பெண்ஜாதியை இப்படிச் செய்ய வேண்டுமென்று சொல்லுவானானால், ஒப்புக்கொள்ளுவானா?...

ஆண், பெண் கூட்டு வாழ்க்கையில் இப்போது வழங்கி வரும் கருத்தமைந்த ‘கற்பு' என்னும் வார்த்தையே அவசியமற்றது என்றும், அது வாழ்க்கை இன்பத்திற்குக் கேடு பயக்கின்றதே ஒழிய, அதனால் நன்மை இல்லை என்றும் சொல்லுவேன். இன்று வழங்கும் ‘கற்பு' பெண்களுக்கு மாத்திரமே ஒழிய ஆண்களுக்கு இல்லை. அது, பெண்களை நிர்ப்பந்திப்பது போல் ஆண்களை நிர்ப்பந்திப்பதில்லை. சமுதாயத்தில் ஒழுக்க ஈனம் ஏற்பட்டதற்குக் காரணம், இந்த ஒருதலைக் கற்பேயாகும். பெண்கள் அடிமையாக்கப்பட்டதற்கும் இந்த ஒரு தலைக் கற்பே காரணமாகும். இந்த ஒரு தலைக்கற்பு உள்ளவரை, சமுதாயம் சீர்படப் போவதில்லை என்பதே எனது உறுதி.

ஆண்களின் ஒழுக்க ஈனமான நடத்தைகளை இந்துமதக் கடவுள், சமயம், சாத்திரம், புராணம் ஆகியவை ஒப்புக் கொள்ளுகின்றனவா இல்லையா என்று கேட்கிறேன். இவை கூடாது என்று சொல்லுகிற ஒரு தமிழன், தன்னை இந்து மதத்தைச் சார்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும். செய்யாவிட்டால், சில பெண்களாவது முன் வந்து அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்யத் துணிவதாகவாவது காட்ட வேண்டும். உரிமையில்தான் சுதந்திர உணர்ச்சி இருக்கிறது. அது இல்லாத இடத்தில் அடிமை உணர்ச்சிதான் இருக்கிறது. அதனாலேயே நமது பெண்கள் அடிமைகளானார்கள். அப்பெண்களின் வயிற்றில் பிறந்த நாம் அடிமை வாழ்வு வாழ்கிறோம்...

அநேகம் பேர்களுக்குச் சேர்க்கையால்தான் பிள்ளைப் பேறு கர்ப்பம் உண்டாகின்றது என்பதுகூடத் தெரியாது. ‘ஏதோ கடவுள் கொடுக்கிறார். கடவுள் வயிற்றில் கொண்டு விடுகிறார். கடவுளே வளர்க்கிறார். கடவுளே பெற்ற பின்பும் நோய் உண்டாக்குகிறார். கடவுளே சாகடிக்கிறார்' என்று கருதிக் கொண்டு, இது விஷயங்களில் மிருகங்களைவிட கேவலமாய் நடந்து கொள்ளுகிறார்கள். சேர்க்கை விஷயம் அது சம்பந்தமான உடல்கூறு ஆகியவைகளைப் பற்றித் தெரிவது, வெகு கேவலமாக இங்கு பேசப்படுகிறது. கதைகளில், புராணங்களில் நாடகத்தில் பச்சை பச்சையாய்க் கேட்கிறபோதும், பார்க்கிறபோதும் ஆனந்தக் கூத்தாடுகிறோம்.

அந்தக் கலைகளை நமது ஆண் - பெண் இருபாலருமே ஓர் அளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும். அது தெரிந்து கொள்ளாமல் வெறும் மிருகப் பிராயமாய் இருப்பதாலேயே அநேக நோய், சாவு, ஊனம், மனச்சஞ்சலம், பொருந்தா வாழ்வு ஆகியவை பெருகுகின்றன. குழந்தைகள் பெறுவதில் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும், குழந்தை பிறந்த பிறகு எப்படி இருக்க வேண்டும், எத்தனை நாள் பொறுத்து மறுபடியும் கர்ப்பம் தரிக்க இடம் கொடுக்க வேண்டும் என்பவைகளையாவது ஒவ்வொரு பெண்ணும் தெரிந்திருக்க வேண்டும்.

சேர்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாமல் நடந்து கொண்டு நோய் வந்தால், அதற்குப் ‘பொம்பளை நோவு' என்று சொல்லிவிடுகிறார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கு அது சம்பந்தமான நோய் வந்தாலும், பெண்கள் அதையும் ‘பொம்பளை வியாதி' என்றுதான் சொல்லுகிறார்கள். இது, பெண்கள் சமூகத்திற்கே இழிவான காரியமாகும்.

ஆண் - பெண் தன்மை, உடல்கூறு, சேர்க்கை விளக்கம், கர்ப்பம், பிள்ளைப்பேறு ஆகியவைகளைப் பற்றிச் சர்க்கார், அத்தருணம் நெருங்கிய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது மேல் வகுப்புக்குப் பாடமாகவாவது வைக்க வேண்டும். இவை நன்றாக மக்கள் அறிந்தால், இக்காரியங்களில் ஒழுக்கத் தவறுதல்கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். சின்ன தவறுதல் கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். இன்ன இன்ன பதார்த்தம் சாப்பிட்டால், உடலுக்கு ஒத்துக்கொள்ளாது, நோய்வரும் என்று கருதினால், எப்படிச் சாப்பிடாமல் விட்டுவிடுகிறானோ, அதுபோல் இன்ன மாதிரி நடந்தால் கேடுவரும் என்று தெரிந்தால், அதைச் செய்யாமல் தப்பித்துக் கொள்வான். அப்படிக்கில்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தெரியாமல், இஷ்டப்படி நடந்து கொண்டு வந்த வினையைக் கடவுள் செயல் என்று சொன்னால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம்?

(காஞ்சிபுரத்தில் 16.6.1940 அன்று நடைபெற்ற திருமண விழாவில் ஆற்றிய உரை)

 *Download As PDF*